Tuesday 20 September 2022

நவராத்திரி 2022 - NAVARATHIRI SEPTEMBER -2022 START

 

நவராத்திரி 2022 வரலாறு, முக்கியத்துவம் மற்றும் தேதிகள்.!

இன்னும் சில தினங்களில் நவராத்திரி தொடங்க இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே, நவராத்திரிக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுவிட்டன. மற்ற பண்டிகைகளைப் போலல்லாமல் நவராத்திரி 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் அவர்களின் வழக்கப்படி நவராத்திரி கொண்டாடப்படும். ஒரு நாள், இரண்டு நாட்கள் என்று இல்லாமல் 10 நாட்களும், வீடுகளில் ஆலயங்களில், கொண்டாட்டங்கள் நிறையும். தினம் ஒரு அலங்காரம், நைவேத்தியம், பூஜை, கொலு ஆரத்தி, மற்ற வீடுகளுக்கு சென்று கொலு பார்ப்பது என்று பெண்கள் மிக மிக விரும்பிக் கொண்டாடும் பண்டிகைகளில் நவராத்திரிக்கு ஈடு இணையே இல்லை.

தமிழ்நாட்டில் 10 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி மிக மிக முக்கியமான பண்டிகையாகும். இந்த ஆண்டு நவராத்திரி செப்டெம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4 ஆம் தேதி முடிகிறது. நவராத்திரியின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இதர விவரங்களை இங்கே பார்க்கலாம்.




வெவ்வேறு பருவ காலங்களில் வரும் நவராத்திரி :

ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பருவங்களில் நவராத்திரி கொண்டாடப்படும். உதாரணமாக வசந்த நவராத்திரி. வசந்த உற்சவம், பசந்த பஞ்சமி என்று பல்வேறு பெயர்களில் 10 நாட்கள் கொண்டாடப்படும். மக்கள், பண்டைய காலத்தில் கோவில் திருவிழாக்கள், விசேஷங்களில், ஒன்று கூடி கொண்டாடி மகிழ்வார்கள். விவசாயம் செழிக்க, மக்கள் மகிழ்ச்சியாக வாழ, பிணி நீங்க என்று பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு பருவ காலத்திலுமே ஒன்பது அல்லது பத்து நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படும் வழக்கம் இருந்து வருகின்றது.

அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி தான். புரட்டாசி மாதம் அமாவாசையன்று நவராத்திரி தொடங்கி, பத்தாம் நாள் தசமி திதியன்று நவராத்திரி முடியும். இந்த திதிகளின் அடிப்படையில்தான் இந்தியா முழுவதுமே நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

 

நவராத்திரி கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் :

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை துணிச்சலாக எதிர்த்து நின்று அவனை வீழ்த்திய துர்கா தேவியின் சக்தியை வழிபட்டு கொண்டாடும் நாட்கள்தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களில், ஒவ்வொரு நாளும் துர்காதேவியை ஒவ்வொரு அவதாரமாக வழிபடுவோம். தீய சக்தியை வென்ற நல்ல சக்தியின் கதைதான் நவராத்திரி அம்மன் வழிபாட்டைக் குறிக்கிறது. இந்த ஒன்பது நாட்களின் வழிபாட்டில், நம் வாழ்வை சூழ்ந்திருக்கும் அனைத்து தீயசக்திகளும், எதிர்மறை ஆற்றலும் நீங்குவதற்கு அன்னை பராசக்தியின் அருள் பெற வேண்டி தினமும் வழிபடும் பழக்கம் உள்ளது.

இதை தவிர்த்து நவராத்திரி பற்றி வேறு சில கதைகளும் கூறப்படுகிறது. உலகத்தில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்ட காலத்தில், மக்களை அழிவிலிருந்தும், உலகமே அழிந்து போகாமலும் அன்னை பராசக்தி தான் காப்பாற்றினார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் அன்னை பராசக்தியின் ஆசையை முழுவதுமாக பெற ஒன்பது நாட்களும் வித விதமாக பூஜை செய்து வணங்கிக் கொண்டாடுகிறோம்.

நவராத்திரி கொலு :

நவராத்திரியின் மிகவும் முக்கியமான அம்சம் கொலு வைப்பதுதான். ஆனால் அனைவரின் வீட்டிலும் கொலு வைக்கும் பழக்கம் கிடையாது. கொலு வைப்பவர்களுக்கு நவராத்திரி மிகவும் குதூகலம் நிறைந்த நாட்களாக இருக்கும். வைக்கவில்லை என்றாலும் கொலு வைத்திருக்கும் வீட்டிற்கு சென்று பூஜையில் கலந்து கொள்வது, ஆலயங்களில் வைத்திருக்கும் கொலுவை பார்ப்பது என்று நவராத்திரி களைகட்டும்.




நவராத்திரி 2022 தேதிகள்:

நவராத்திரி தொடக்கம் – செப்டம்பர் 26, 2022

நவராத்திரி முடிவு தேதி – அக்டோபர் 4, 2022

சரஸ்வதி பூஜை – அக்டோபர் 4, 2022

மாலை நேரத்தில் விளக்கேற்றி, அம்மன் பாடல்களை, பாசுரங்களை பாராயணம் செய்யலாம். தினமும் ஒரு இனிப்பு, சுண்டல் வகை சமைத்து நைவேத்தியம் செய்யலாம். பெண்களை வீட்டுக்கு அழைத்து வெற்றிலைப் பாக்கு, தாம்பூலம் கொடுத்து ஆசி பெறலாம்.

No comments:

Post a Comment