புனலில் ஏடெதிர் செல்லெனச் செல்லுமே; புத்த னார்தலை தத்தெனத் தத்துமே; கனலில் ஏடிடப் பச்சென்(று) இருக்குமே; கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே; பனையில் ஆண்பனை பெண்பனை ஆக்குமே; பழைய என்புபொற் பாவைய தாக்குமே; சிவன ராவிடம் தீரெனத் தீருமே; செய்ய சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே. தலைகொள் நஞ்சமு தாக விளையுமே; தழல்கொள் நீறு தடாகம தாகுமே; கொலைசெய் ஆனைகுனிந்து பணியுமே; கோள ராவின் கொடுவிடம் தீருமே; கலைகொள் வேத வனப்பதி தன்னிலே; கதவு தானும் கடுகத் திறக்குமே; அலைகொள் வாரியிற் கல்லும் மிதக்குமே; அப்பர் போற்றும் அருந்தமிழ்ப் பாடலே. வெங் கராவுண்ட பிள்ளையை நல்குமே; வெள்ளை யானையின் மீதேறிச் செல்லுமே; மங்கை பாகனைத் தூது நடத்துமே; மருவி யாறு வழிவிட்டு நிற்குமே; செங்க லாவது தங்கம தாக்குமே; திகழும் ஆற்றிட்டுச் செம்பொன் எடுக்குமே; துங்க வான்பரி சேரற்கு நல்குமே; துய்ய நாவலூர்ச் சுந்தரர் பாடலே. பெருகும் வைகை தனையடைப் பிக்குமே; பிரம்ப டிக்கும் பிரான்மேனி கன்றுமே; நரியெ லாம்பரி யாக நடத்துமே; நாடி மூகை தனைப்பேசு விக்குமே; பரிவிற் பிட்டுக்கு மண்சுமப் பிக்குமே; பரமன் ஏடெழுதக் கோவை பாடுமே; வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே; வாத வூரர் வழங்கிய பாடலே.
Saturday, 6 September 2014
திருமுறைகளின் மஹிமை - (Greatness of Thirumurais)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment